இன்று முதல் அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார் முதலமைச்சர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் செப்டம்பர் 10ஆம் தேதி வரை இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளில் அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். இதன் மூலம் தொழில் முதலீடுகள் தமிழகத்துக்கு அதிக அளவில் கிடைக்கும்.

இது குறித்து அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, 28ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் முதலமைச்சர் லண்டன் சென்றடைகிறார்.

அங்கு மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணித்தர மேம்பாடுகளை கண்டறிந்து, அதனை நமது மாநிலத்தில் செயல்படுத்தும் வகையில் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தினரை சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட உள்ளார்.

பின்னர் இங்கிலாந்தில் செயல்படுத்தப்படும் அவசர ஆம்புலன்ஸ் சேவையை பார்வையிடுகிறார்.

லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளைகளைத் தமிழகத்தில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திடுகிறார்.

அதைத் தொடர்ந்து, இந்துஜா உள்ளிட்ட பல தொழில் முதலீட்டாளர்களை சந்திக்கும் முதலமைச்சர், காற்றாலை மின்னுற்பத்தி, சூரிய சக்தி மின்சாரம் தொடர்பான நிறுவனத்தையும் பார்வையிட உள்ளார்.

இது தவிர இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் அவர், சந்திக்க உள்ளார்.

செப்டம்பர் இரண்டாம் தேதி நியூயார்க் செல்லும் முதலமைச்சர் பழனிசாமி, அமெரிக்க தமிழ் தொழில்முனைவோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச உள்ளார்.

தமிழகத்தில் தொழிற்சாலைகளை நடத்திவரும் கேட்டர்பில்லர், ஃபோர்டு, ஃபாக்ஸ்கான், லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் தொழில் முனைவோரையும் அவர் சந்திக்க உள்ளார்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்பட உள்ள உலகத்தரம் வாய்ந்த கால்நடைப் பூங்காவுக்குத் தேவைப்படும் தொழில்நுட்பங்களை அறிய கலிபோர்னியாவில் உள்ள கால்நடைப் பண்ணைகளை முதலமைச்சர் பார்வையிட உள்ளார்.

பின்னர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஏற்கனவே உள்ள மின்கட்டமைப்பில் எளிய முறையில் சேர்ப்பது தொடர்பான வழிமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிய சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ப்ளூம் எனர்ஜி நிறுவனத்தையும் அவர் பார்வையிடுகிறார்.

செப்டம்பர் 7 ஆம் தேதி அன்று அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பும் வழியில், 8, 9 ஆகிய தேதிகளில் துபாயில் தொழில்முனைவோர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு முதலமைச்சர் பழனிசாமி உரையாற்றுகிறார்.

பின்பு, துபாயில் உள்ள தொழில் முனைவோர்களிடம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கும் வகையில் தனியே ஒரு கூட்டம் நடத்த உள்ளார். அதைத்தொடர்ந்து செப்டம்பர் பத்தாம் தேதி முதலமைச்சர் பழனிசாமி தமிழகம் திரும்புகிறார்.

Exit mobile version