சேலத்தில் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

மக்களின் குறைகளை நகரங்கள், கிராமங்கள் தோறும் சென்று நிவர்த்தி செய்யும் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று தொடங்கி வைக்கிறார்.

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை தொடங்கி வைத்து மக்களுக்கு அரசு நலத்திட்டங்களை முதலமைச்சர் வழங்கிறார். இந்த திட்டத்தின் மூலம் அனைத்து நகர்புற வார்டுகளிலும், கிராமங்களிலும் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி ஒரு குறிப்பிட்ட நாளில் மாவட்ட அலுவலர்கள் மனுக்களை பெறுவார்கள். பெறப்படும் மனுக்கள் அனைத்தும் கணினியில் பதியப்பட்டு ஒரு வார காலத்திற்குள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு, ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணப்படும். இதேபோல், செப்டம்பர் மாதம் முதல், அமைச்சர்கள் தலைமையில் வட்ட அளவிலான விழாக்கள் நடத்தப்பட்டு மனுக்கள் பெறப்படும் என தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டத்தில் இன்றும் நாளையும், 6 இடங்களில் மனுக்களை பெற இருக்கிறார். வனவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும்,நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்திலும், பின்னர், எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், பிற்பகலில் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மனுக்களை பெறுகிறார்.

நாளை காலை தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும், பின்னர், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும், பிற்பகலில் வாழப்பாடி சேலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்திலும் முதலமைச்சர் மனுக்களை பெறுகிறார்.

Exit mobile version