தமிழக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை சார்பில், சுமார் 16 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு, 4 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய கட்டடங்கள் மற்றும் பயிற்சியாளர்கள் விடுதிக்கட்டடம் ஆகியவை கட்டப்பட்டுள்ளது. அதே போன்று, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 7 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இவற்றை, தலைமைச்செயலகத்தில் இருந்து, காணொலி மூலம், முதலமைச்சர் திறந்து வைத்தார். தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம், திருப்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 80 லட்சம் ரூபாய் செலவில், கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், 81 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். அதே போன்று கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்காக, ஒரு கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
அதே போன்று, திருவான்மியூர் மருந்தீசுவரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 20 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, நவீன திருமண மண்டபத்தையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலி மூலம் திறந்து வைத்தார். கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பிரளயகாலேசுவரர் திருக்கோயில், திருவள்ளூர் மாவட்டம் ஆற்காடு குப்பம் சோளீஸ்வரர் சுவாமி திருக்கோயில், விருதுநகர் மாவட்டம் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி திருக்கோயில்களில், 1 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அன்னதான கூடங்களையும், முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், தலைமைச்செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.