வேளாண்மைத்துறைக்கு, சுமார் 133 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டுவரும், மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், 19 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விரிவுரை அரங்கம் மற்றும் தேர்வு அறை ஆகியவற்றை, முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சானூரில் உள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் விரிவுரை அரங்கம் மற்றும் ஆய்வகத்தை திறந்து வைத்தார்.
திருச்சி மாவட்டம், குமுளூர் வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், 14 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவர் மற்றும் மாணவியர் படிப்பு மையங்கள், தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் மூலமாக நபார்டு வங்கியின் நிதியுதவியுடன், திருச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள முதன்மை பதப்படுத்தும் நிலையங்களில், 31 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடங்கள், எடை மேடைகள், குளிர்பதன கிடங்குகள் உள்ளிட்டவைகளையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், விளாத்திக்குளம், புதூர் ஆகிய இடங்களில் உள்ள முதன்மை பதப்படுத்தும் நிலையங்களில் 10 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடங்கள், ஏல அறைகள், விவசாயிகளுக்கான பயிற்சி நிலையம், எடைமேடைகள், விவசாயிகளுக்கான சேவை மையங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில், பல்வேறு இடங்களில், 23 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடங்கள், குளிர்பதன கிடங்குகள் உள்ளிட்ட, மொத்தம் 133 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான வேளாண்மைத்துறை கட்டடங்களை முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செல்லூர் ராஜு, துரைக்கண்ணு, ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம், வேளாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, வேளாண் வணிகத்துறை ஆணையர், வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.