ரூ.213 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

சென்னை தலைமை செயலகத்தில் 213 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை மாவட்டம் கோவைப்புதூரில் 10 கோடியே 88 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 137 காவலர் குடியிருப்புகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். பெரம்பலூர் மாவட்டம் துரைமங்கலம், நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு ஆகிய இடங்களில் 15 கோடியே 21 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டிலான 124 காவலர் குடியிருப்புகளை திறந்து வைத்தார்.

சென்னை மாநகரத்திற்குட்பட்ட சிட்லபாக்கம், திருமங்கலம், ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை, தஞ்சை மாவட்டம் பட்டீஸ்வரம் ஆகிய இடங்களில் 4 கோடியே 32 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பீட்டிலான புதிய காவல் நிலைய கட்டடங்களை திறந்து வைத்தார். காஞ்சிபுரத்தில் 63 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குற்ற புலனாய்வுத்துறை கட்டடம், சேலம் அன்னதானபட்டியில் 2 கோடியே 97 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பீட்டில் ஆயுதப்படை நிர்வாக கட்டடம், அரக்கோணத்தில் 54 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பீட்டில் துணை காவல் கண்காணிப்பாளர் முகாம கட்டடம், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 1 கோடியே 44 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு துறையினருக்கான 13 குடியிருப்புகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து புழல் மத்திய சிறைச்சாலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்ட பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையத்தையும் திறந்து வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம் மேலக்கோட்டையூரில் 51 கோடியே 14 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பீட்டில் காவலர் பொதுப்பள்ளி கட்டுவதற்கு அரசு நிர்வாக அனுமதி அளித்துள்ளது. இதன் முதற்கட்ட பணிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும் 2018 ம் ஆண்டில் காவல்துறை கையாண்ட வழக்குகள் குறித்த சிறப்பு மலரையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளீயிட்டார். இந்த நிகழ்ச்சிகளில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பாரதியார் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 2 கோடியே 63 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 19 கூடுதல் வகுப்பறைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மேலும் 81 கோடியே 69 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பீட்டில் 51 அரசுப்பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார். மேலும் 12 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் 1 முதல் 12ம் வகுப்பு பயிலும் 70 லட்சம் மாணவர்களுக்கு இந்த ஆண்டு திறன் அட்டைகள் வழங்கப்பட உள்ளது. 7 மாணவர்களுக்கு இந்த அட்டைகளை வழங்கி இத்திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, பாடநூல் கழக தலைவர் வளர்மதி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதைதொடர்ந்து தூத்துக்குடி,ஸ்ரீவைகுண்டம்,காளையார் கோவில், சிங்கம்புணரி,சூளகிரி ஆகிய இடங்களில் 12 கோடியே 79 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய வட்டாட்சியர் அலுவலகங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். மேலும் சென்னை எழிலகத்தில் 15 கோடியே 7 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள பேரிடர் மேலாண்மை அலுவலகம், பயிற்சி நிலையம், மற்றும் மாநில அவரச கட்டுப்பாட்டு மையத்திற்கு அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 101 நில அளவர், மற்றும் 157 வரைவாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 14 நபர்களுக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இந்த நிகழ்வில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version