உயர்கல்வித்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சுமார் 129 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், 7 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கல்விசார் மற்றும் நிர்வாகக் கட்டடங்களை காணொலிக் காட்சி மூலம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சேலம் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திறன்மேம்பாட்டு மையம், தொழில்முனைவு மையம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை திறந்து வைத்தார். பல்வேறு மாவட்டங்களில், சுமார் 83 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 9 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 3 அரசு பொறியியல் கல்லூரிகள், 2 அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகியவற்றையும் முதலமைச்சர் திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தலைமைச்செயலாளர் சண்முகம் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், திண்டுக்கல் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மையக் கட்டடத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார். தஞ்சாவூர், விருதுநகர், விழுப்புரம், மதுரை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் 19 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டடங்களையம் முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார்.நிகழ்ச்சியின்போது, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.