விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் உறுதி

தமிழ்நாட்டில் புயலால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் தொடர்பான அறிக்கை கிடைத்ததும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர், வல்லம்படுகையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், கனமழையால் ஏற்பட்ட சேதங்களை, அறிக்கையாக தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

புயல் பாதிப்புகளுக்கு மத்திய அரசு நிவாரண நிதி வழங்கவில்லை என கூறுவது தவறு என்று கூறிய முதலமைச்சர், கூடுதல் நிதி வழங்க, மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மழைக்காலங்களில் பொழியும் மழைநீர் வடியும் வகையில் கடலூர் மாவட்டத்தில் 400 கோடி ரூபாயில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார். தற்போது வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்ததால், பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதாகவும், மழை நீர் தேங்கிய பகுதிகளில் தண்ணீரை அகற்ற மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

Exit mobile version