விழுப்புரம் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கு பதிவாளரை நியமிக்கவும், நிதி ஒதுக்கவும் உத்தரவிடக்கோரி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரத்தில், முந்தைய அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட டாக்டர் ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கு, பதிவாளரை நியமிக்கவும், உரிய நிதி ஒதுக்கவும் உத்தரவிடக் கோரி, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மனு தாக்கல் செய்திருந்தார்.
திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர், விழுப்புரம் மாவட்டத்தில் முதுகலை படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சட்டத்தை மீறிய செயல் எனவும், இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சஞ்சீப் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டாக்டர் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தின் வரம்புக்குள் வரும் பகுதிகளில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் படிப்புகளை வழங்க முடியாது என தெரிவித்தார்.
இதையடுத்து, திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளரின் அறிவிப்புக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு நாளைய தினத்திற்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.