திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தான் மிரட்டலின் காரணமாக சட்டவிரோதமாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணை தலைவர் பணி செய்ய தடை விதிக்க கோரிய வழக்கை, தேர்தல் வழக்காக தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
மரக்காணம் ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் கடந்த நவம்பர் 22 ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுக அமைச்சர் பொன்முடியின் ஆதரவாளரான அர்ஜூனன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு தானும், திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தானின் ஆதரவு பெற்ற தயாளன் என்பவரும் போட்டியிட்டதாகவும், அதில் தனக்கு 14 ஓட்டுகள் கிடைத்த நிலையில், தேர்தல் அலுவலருக்கும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக,12 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்த தயாளன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இதேபோல் மரக்காணம் ஒன்றிய குழு துணை தலைவர் பதவிக்கு, வேட்பு மனு வாங்கும் நடைமுறையை கூட பின்பற்றாமல், நேரடியாக பழனி என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்ததாகவும் கூறியிருந்தார்.
ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த தேர்தல் குறித்து நவம்பர் 23ஆம் தேதி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசனிடம் அலைபேசியில் கேட்ட போது, தனது 35 ஆண்டு கால அரசு பணியில் இதுபோன்ற நிர்பந்தத்திற்கு உள்ளானதில்லை, தன்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லையென அவர் மனக்குமுறலை வெளிப்படுத்தியதாக சுட்டிக்காட்டியிருந்தார்.
எனவே வெற்றிபெற்றதாக சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்ட மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோரை பதவி ஏற்கவும் பணி செய்யவும் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
மேலும், தயாளன் வெற்றி பெற்றதை செல்லாது என அறிக்கவும், மறு வாக்கு எண்ணிக்கை நடத்தி, மரக்காணம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக தன்னை அறிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருந்தார்.
ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பதவிக்கான தேர்தலை புதிதாக நடத்த உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரியிருந்தார்.இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகளை ரிட் வழக்குகளாக விசாரிக்க கூடாது, தேர்தல் வழக்காக மட்டுமே தாக்கல் செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும் இந்த விவகாரம் தேர்தல் வழக்கு தொடர தகுதியானது என்பதால், தேர்தல்வழக்கு தொடர அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார்