சயன், மனோஜ் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய சயன்,மனோஜ் ஆகியோரின் ஜாமினை ரத்து செய்த உதகை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய சயன், மனோஜ் ஆகியோருக்கு வழங்கியிருந்த ஜாமீனை ரத்து செய்த உதகை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி இளந்திரையன் முன்பு நடைபெற்று, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணையின் போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான, தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், சயன் மற்றும் மனோஜ் இருவரும் தொடர்ச்சியாக கொலை, கொள்ளை சமபவங்களில் ஈடுபட்டு வருபவர்கள் எனவும் அவர்கள் மீது தமிழகம் மற்றும் கேரளாவில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதையும் சுட்டி காட்டியதோடு, கொடநாடு வழக்கில் 9 பேர் சம்மந்தப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணைக்கு யாரும் முறையாக ஊட்டி நீதிமன்றத்தில் ஆஜராவதில்லை எனவும், 9 பேரும் இதுவரை ஒரே நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகததால் கடந்த ஒரு வருடமாக இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யமுடியாத நிலை உள்ளதாகவும், இதை அவர்கள் திட்டமிட்டு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், சாமுவேல் வெளியிட்ட வீடியோவில் சயன் மற்றும் மனோஜ் அவர்களே தங்கள் குற்றத்தை ஒப்பு கொண்டுள்ளதாகவும், ஆனால் உதகை நீதிமன்றத்தில் சார்பித்துள்ள ஜாமின் மனுவில் தாங்கள் தவறே செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளதையும் சுட்டி காட்டி, இந்த முரணை நீதிமன்றம் கணக்கில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதே போல அரசு தரப்பு சாட்சிகள் இருவர் காவல் நிலையத்தில் தங்கள் உயிருக்கு ஆபத்து என புகார் அளித்துள்ளதை
சுட்டி காட்டிய அவர், சயன்,மனோஜ் அரசு தரப்பு சாட்சிகளை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதாகவும், உதகை நீதிமன்றம் இருவரது ஜாமினை ரத்து செய்த தன் உத்தரவில், அவர்கள் நீதிமன்றம் அளித்த சட்டப்படியான சலுகையை (ஜாமின்) தவறாக உபயோக படுத்தியதோடு, வரம்புகள் மீற பட்டுள்ள தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதையும் சுட்டி காட்டிய அவர், ஜாமின் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்த நிலையில், உதகை நீதிமன்றம் ஜாமினை ரத்து செய்ததை எதிர்த்து சயன்,மனோஜ் தாக்கல் செய்த மனுவை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Exit mobile version