நீலகிரி மாவட்டம் குன்னூரில் தந்தி மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி முத்து பல்லக்கு தேரில் வலம்வந்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
குன்னூரில் பிரசித்தி பெற்ற தந்தி மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் குன்னூரில் வசித்துவரும் கேரள மக்களின் பாரம்பரிய முத்து பல்லக்கு தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டத்தையொட்டி செண்டை மேளம், மயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் களைகட்டின. விழாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும்வகையில், செயற்கையான முறையில் யானை, புலி, சிங்கம், காட்டெருமை உள்ளிட்டவை வடிவமைக்கப்பட்டிருந்தன. மேலும் அம்மன் அரக்கர்களை வதம் செய்வது போன்றும் வடிவமைக்கப்பட்டிருந்தது.
விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரள, கர்நாடக மாநிலங்களை சேர்ந்தவர்களும் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.