தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுகல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் கன மழைக்கான வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறை பகுதியில் 4 புள்ளி 4 சென்டி மீட்டர் மழையும், கன்னியாகுமரியில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. தமிழக கடற்கரை பகுதிகளில் அவ்வப்போது வலுவான காற்று வீசக்கூடும் என்பதால், மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.