பிரிட்டனில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றிப் பெற்று, அங்கு போரிஸ் ஜான்சன் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளார். இதனையடுத்து, அவருக்கு சவாலாக இருக்கும் ஐந்து முக்கிய பிரச்சனைகள் எவ்வாறு கையாள உள்ளார் என்பதை பார்க்கலாம்.
1.பிரெக்ஸிட்டை நிறைவேற்றுதல்:
பிரிட்டனின் பிரதமராக மீண்டும் தேர்வாகியுள்ள போரிஸ் ஜான்சன் அந்நாட்டு மக்களுக்கு அளித்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். வரும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனை வெளியே கொண்டுவருவதே முதலாவது முக்கிய பணி. பிரெக்ஸிட்டை நிறைவேற்றிய பின்னர், மற்ற அனைத்து பணிகளையும் 2020ஆம் ஆண்டு டிசம்பர் 31ந் தேதிக்குள் அவர் நிறைவேற்றியாக வேண்டும்.
2. தேசிய சுகாதார சேவைக்கு கூடுதல் நிதி
பிரிட்டனில் நடந்து முடிந்த தேர்தலில் மற்ற முக்கிய கட்சிகளை போன்று கன்சர்வேட்டிவ் கட்சியும், அந்நாட்டின் தேசிய சுகாதார சேவைக்கு கூடுதல் நிதியளிப்பதாக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. பிரிட்டனில் மருத்துவ பணியாளர்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாக துறைசார் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவத்துறையை தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்துவது, நோயாளிகள் காத்திருப்பு நேரத்தை குறைப்பது போன்ற பல்வேறு வேலைகள் போரிஸ் ஜான்சனுக்கு உள்ளன.
3. சமூகப் பாதுகாப்பு நெருக்கடி
மூத்த குடிமக்களையும் மாற்றுத்திறனாளிகளையும் ஆதரிக்கும் சேவைத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பது போரிஸ் ஜான்சனின் பட்டியலில் உள்ள இன்னொரு வாக்குறுதி. இந்த விவகாரம் தொடர்பாக, தான் ஆட்சியமைத்த 100 நாட்களுக்குள் மற்ற கட்சிகளுடன் இணைந்து பேசி முடிவெடுக்கப்படும் என்று போரிஸ் கூறி இருக்கிறார். ஆனால், கடந்த கால வரலாற்றை பார்க்கும்போது, கன்சர்வேட்டிவ் கட்சி இதுதொடர்பாக அளித்த வாக்குறுதிகளில் எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை என்றே தெரிகிறது.
தற்போதைக்கு, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் நலனை மேம்படுத்துவதற்காக அடுத்த ஐந்தாண்டுகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போதுள்ள பிரச்னைகளை களைவதற்கு இந்த நிதி ஒதுக்கீடு போதுமானதாக இருக்காது என்கின்றனர் வல்லுநர்கள்.
4. பருவநிலை மாற்றம்
சுற்றுச்சூழல் சார்ந்த கடுமையான சவால்களை பிரிட்டன் எதிர்கொண்டுள்ள நிலையில், போரிஸ் ஜான்சன் விரைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம், பருவநிலை மாற்றம் சார்ந்த ஐக்கிய நாடுகள் அவையின் மிக முக்கிய கூட்டம் ஒன்று கிளாஸ்கோவில் நடைபெற உள்ளது. கார்பன் வெளியேற்றத்தை எப்படி குறைப்போம் என்பது குறித்த திட்டம் இல்லாமல், பிரிட்டன் இந்த கூட்டத்தில் பங்கேற்குமானால் அது அந்நாட்டுக்கு மிகுந்த அவமரியாதையை ஏற்படுத்தக் கூடும். எனவே பருவநிலை மாற்றம் பிரிட்டனுக்கு முக்கிய பிரச்சினையாக உள்ளது.
5. குடியேற்ற முறையை மேம்படுத்துதல்
கன்சர்வேட்டிவ் கட்சி முன்வைத்துள்ள குடியேற்ற முறை மக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த திட்டத்தை கன்சர்வேட்டிவ் கட்சி நிர்ணயித்த காலக்கெடுவான ஜனவரி, 2021க்குள் நிறைவேற்ற முடியுமா? – என்ற கேள்வி பிரதானமாக எழுகிறது.பிரிட்டன் முழுவதும் பல்வேறு துறைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது, அதை சரிசெய்வதற்கு குடியேற்றம் உதவலாம். ஆனால், அதன் பல்வேறு சாதக பாதகங்களையும் சேர்த்து ஆராய வேண்டியது தேவையாக உள்ளது.