மத்திய இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை யார் யாருக்கு கிடைக்கும் என்பது குறித்த விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த ஒன்றாம் தேதி, மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் பியூஷ் கோயல், சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்று குறிப்பிட்டார். 2 ஹெக்டேர் வரையில் சாகுபடி நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 3 தவணைகளில் இந்த தொகை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த திட்டத்தின் செயல்பாட்டு வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, அரசியல் அமைப்பு பதவி வகித்தவர்கள் மற்றும் வகிப்பவர்கள், முன்னாள் மற்றும் இன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோரை உறுப்பினராக கொண்ட குடும்பங்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், மாதம் 10 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கும் அதிகமாக ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் குடும்பத்தினர் மற்றும் கடந்த ஆண்டில் வருமான வரி செலுத்தியவர்களின் குடும்பங்களுக்கும் இந்த நிதி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.