முத்தலாக் மசோதா மீது நாளை மக்களவையில் விவாதம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முத்தலாக் முறை செல்லாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, முத்தலாக்கை தண்டனைக்குரிய குற்றமாக்கும் வகையில், சட்டம் இயற்றுவதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால், மாநிலங்களவையில் நிறைவேறவில்லை. இந்நிலையில், கடந்த செப்டம்பரில் முத்தலாக் மசோதாவை நிறைவேற்ற அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் ஆயுட்காலம் 6 மாதங்கள் மட்டுமே என்பதால், திருத்தங்களுடன் கூடிய புதிய மாசோதா கடந்த 17ஆம் தேதி, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து, இந்த மசோதா மீது நாளை மக்களவையில் விவாதம் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனிடையே இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன