மத்திய அரசு தொலைநோக்குப் பார்வையுடன் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பாரத்மாலா திட்டம் மூலம் சாலை கட்டமைப்பை மேம்படுத்தும் அறிவிப்பு தமிழகத்திற்கு பயனளிக்கும் என்றும், கிராமப்புற சாலைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படுவதால் தமிழகத்திற்கு முழு பயன் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு ஒப்புதலை விரைவு படுத்த வேண்டும் என்றும், கோவை, மதுரை புதிய மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். திறந்தவெளி விற்பனையில் மின்சாரத்தின் மீது விதிக்கப்படும் வரிகளை மாற்றியமைப்பது தொடர்பாக மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து கருத்தொற்றுமையை ஏற்படுத்தவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கும் திட்டத்தை மாநில அரசின் திட்டங்களோடு இணைந்து செயல்படுத்த வேண்டும். கோதாவரி – காவிரி – வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வட்டி மானியம் அளிக்க நிதி ஒதுக்கீடு சிறு வணிகர்களுக்கு ஓய்வூதிய திட்டம் போன்றவை தமிழகத்திற்கு பலனளிக்கும் என்று முதலமைச்சர் வரவேற்றுள்ளார்.
மகளிர் சுய உதவிக் குழுக்களை வழுப்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ள திட்டங்களை வரவேற்பதாகவும் பல்வேறு துறைகளில் நேரடி முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மேலும் உயரும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பிசிராந்தையாரின் புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டி தமிழுக்கு பெருமை சேர்த்ததற்காக தமிழக மக்கள் சார்பில் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.