கீழடியில் 5ஆம் கட்ட ஆய்வு நடத்த தமிழக தொல்லியல் துறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கீழடி கிராமத்தில் 4 கட்டங்களாக நடைபெற்ற ஆய்வுகளில் சுட்ட மண்ணால் ஆன ஓடுகள், யானை தந்தங்கள், தங்க காதணி, அச்சுகள், உறைகிணறு உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன.
ஏராளமான தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளதால், 5ஆம் கட்ட ஆய்வு பணியினை தொடர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாகவும், அதற்கான அனுமதியை மத்திய அரசிடம் கோரியுள்ளதாகவும், அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருந்தார்.
இந்த நிலையில், 5ஆம் கட்ட அகழாய்வு பணிக்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அனுமதி கடிதம் கிடைத்தவுடன் அதற்கான நிதியினை தமிழக அரசு அறிவிக்கும் என்றும், அதனை தொடர்ந்து வரும் ஜனவரி இறுதியில் கீழடியில் 5 ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.