மத்திய நிதி நிலை அறிக்கை தொலை நோக்கு பார்வை கொண்டது…

மத்திய நிதி நிலை அறிக்கை, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளித்து நவீன இந்தியாவை படைக்கும் தொலை நோக்கு பார்வை கொண்டது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய நிதிநிலை அறிக்கை இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதாகவும் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தும் விதமாகவும் அமைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புறநானூற்று பாடலை நிதி நிலை அறிக்கையில் குறிப்பிட்டு பேசியது தமிழினத்திற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் மாபெரும் கவுரவம் என நன்றி தெரிவித்துள்ளார். மக்களுக்கு வீட்டு வசதி அளிப்பதற்கு தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளதை தமிழக அரசு வரவேற்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மகளிர் சுய உதவி குழுக்களை வலுப்படுத்தும் விதமாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களையும் அவர் வரவேற்றுள்ளார். பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 95 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதால் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வீட்டு வசதி வாய்ப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில் ஏழ்மையை ஒழித்து வளர்ச்சியை ஊக்குவிக்கும் நிதி நிலை அறிக்கை இது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version