பிரதமர் நரேந்திர மோடி அரசில் முக்கிய பதவிகளை வகிக்கும் அமைச்சர்களின் குறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்…
2014 ஆம் ஆண்டு மோடி அரசில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த நிர்மலா சீதாராமன், 2017 செப்டம்பர் மாதம் முதல் பாதுகாப்பு துறை அமைச்சராக பதவி வகித்தார். தற்போதைய மோடி அரசில், நிதி – கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சராக இவர் பொறுப்பேற்றுள்ளார்.
ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்த சுப்பிரமணியம் ஜெய்சங்கர், தற்போது பிரதமர் மோடி அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
இரண்டு முறை பாஜகவின் தேசிய தலைவராகவும், 2014 ஆம் ஆண்டு லக்னோ தொகுதியில் வெற்றி பெற்று மோடி அரசில் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய ராஜ்நாத் சிங், தற்போது மோடி அமைச்சரவையில் பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
2014 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அமித்ஷா, இந்த ஆண்டு குஜராத்தின் காந்தி நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது மோடி அரசில் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
2014 ஆம் ஆண்டு, அமேதி தொகுதியில், ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த ஸ்மிருதி இரானி, இந்த ஆண்டு அதே தோகுதியில் போட்டியிட்டு ராகுலை வீழ்த்தி வெற்றி பெற்றார். தற்போது, மோடி அரசில், ஸ்மிருதி இரானிக்கு, குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மற்றும் ஜவுளித்துறை வழங்கப்பட்டுள்ளது.
முந்தைய மோடி அரசில், நிலக்கரி, சுரங்கம், ரெயில்வே, நிதி என பல துறைகளின் அமைச்சராக பியூஷ் கோயல் பதவி வகித்தார். தற்போது, மோடி அமைச்சரவையில் ரயில்வே துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த முறை நாக்பூர் தொகுதியில் வெற்றி பெற்று மோடி அரசில் சாலை போக்குவரத்து, கப்பல் துறை அமைச்சராக இருந்த நிதின் கட்கரி, தற்போது அமைந்துள்ள மோடி அமைச்சரவையில், போக்குவரத்து – சிறு குறு நிறுவனங்கள் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
Discussion about this post