சபரிமலை ஐயப்பன் கோயில் உள்பட பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களிலும், பெண்கள் புறக்கணிக்கப்படுவது தொடர்பாக தக்கல் செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளை உச்சநீதி மன்றம் இன்று விசாரிக்கிறது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபாடு நடத்த உச்சநீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி சுமார் 56 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதேபோல், மசூதிகளில் பெண்களை அனுமதிக்கக் கோரியும், ஷியா முஸ்லிம்-தாவூதி போரா பிரிவைச் சேர்ந்த சிறுமிகளுக்கு மேற்கொள்ளப்படும் சடங்குகளுக்குத் தடை விதிக்கக் கோரியும் பார்சி இனப் பெண்களை அந்த இனத்தவரின் வழிபாட்டுத் தலத்துக்குள் அனுமதிக்கக் கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரிக்க உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் 9 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரிக்க உள்ள நிலையில், இதன் விசாரணை உச்சநீதி மன்றத்தில் இன்று நடைபெறுகிறது.