இரட்டை குடியுரிமை விவகாரம் குறித்த வழக்கு விரைவில் விசாரணை

இரட்டை குடியுரிமை விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் வேட்புமனுக்களை நிராகரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இங்கிலாந்தில் நிறுவனங்களுக்கான பதிவாளர் அலுவலகத்தில் பேக்காப்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் தாக்கல் செய்த ஆவணங்களில் ராகுல்காந்தி பிரிட்டீஷ் குடியுரிமை பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்களவை தேர்தலில் அமேதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் துருவ் லால் என்பவர் அளித்த புகாரை நிராகரித்து அமேதி மற்றும் வயநாடு தொகுதிகளில் ராகுலின் வேட்புமனுக்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது.

இதே விவகாரம் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி அளித்த புகாரை ஏற்ற உள்துறை அமைச்சகம், 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க ராகுல்காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இரண்டு தனிநபர்கள் இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ராகுல் இந்திய குடிமகனாக இல்லாத நிலையில், அவரது குடியுரிமை தொடர்பாக முடிவெடுக்கும்வரை ராகுலின் வேட்புமனுக்களை நிராகரிக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட அந்த வழக்கில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு இந்த வழக்கை அடுத்த வாரம் விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version