அயோத்தி வழக்கு: விசாரணையின் போது ஆவணங்களை கிழித்தெறிந்த வழக்கறிஞர்

அயோத்தி வழக்கில் சமரசப் பேச்சு நடத்துவதற்காக அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் வழங்கியுள்ளது. வழக்கு விசாரணையின்போது ஆவணங்களை வழக்கறிஞர் கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இரண்டே முக்கால் ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த வழக்கில் நிர்மோகி அகரா, ராம் லல்லா, சன்னி வக்பு வாரியம் ஆகியவை நிலத்தைச் சம பங்காகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மூன்று தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கைத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் நாள்தோறும் விசாரித்து வருகிறது. வழக்கின் வாதங்களை அனைத்துத் தரப்பினரும் இன்றுடன் முடித்துக் கொள்ள வேண்டும் என ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது இந்து மகாசபா சார்பில் தங்களையும் இந்த வழக்கில் ஒரு தரப்பினராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று மாலை 5 மணியுடன் முடிவடைய உள்ளதால் அதற்கு முன் எந்த மனுவையும் ஏற்க முடியாது எனக் கூறி அதை ஏற்கத் தலைமை நீதிபதி மறுத்துவிட்டார்.

இதனிடையே அயோத்தி வழக்கில் சமரசப் பேச்சு நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய மூவர் குழு தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் வழங்கியது. வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்து மகாசபை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வரைபடங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை முஸ்லிம் அமைப்பு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ராஜீவ் தவானிடம் வழங்கினார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ராஜீவ் தவான் அந்தத் தாள்களைக் கிழித்தெறிந்தார். இதனால் ஆத்திரமடைந்த தலைமை நீதிபதி, இப்படி நடந்துகொண்டால் நீதிமன்றத்தில் இருந்து எழுந்து செல்ல வேண்டியிருக்கும் என எச்சரித்தார்.

Exit mobile version