அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தரை நியமனம் செய்வது குறித்து உச்ச நீதிமன்றம் இன்று பரிசீலித்து முக்கிய முடிவினை அறிவிக்க உள்ளது.
அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமி – பாபர் மசூதி தொடர்பான வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தை சம்பந்தப்பட்ட 3 அமைப்புகள் சரிசமமாக பிரித்துக் கொள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து 14 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை பிப்ரவரி மாதம் விசாரித்த அரசியல் சாசன அமர்வு, மத்தியஸ்தம் மூலம் இந்த பிரச்சனையை ஏன் சுமுகமாக தீர்க்கக் கூடாது என்று யோசனை தெரிவித்தது. ஒரு சதவீதம் வாய்ப்பு இருந்தாலும் மத்தியஸ்த்துக்கு அனுமதி தர தயாராக இருப்பதாக நீதிபதிகள் கூறினர். இதை ஒரு சிலர் ஏற்றுக் கொண்டனர். இந்தநிலையில், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. அப்போது மத்தியஸ்தரை நியமிப்பது தொடர்பாக நீதிமன்றம் முக்கிய முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.