அமெரிக்காவில் ஒரு வாரத்திற்குள் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த 6-ம் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தின. இதனையடுத்து, நாடாளுமன்ற கீழ்சபையான பிரதிநிதிகள் சபையை எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கைப்பற்றியது. முடிவு அறிவிக்கப்பட்ட 420 இடங்களில் ஜனநாயக கட்சிக்கு 223 இடங்களும், டிரம்பின் குடியரசு கட்சிக்கு 197 இடங்களும் கிடைத்தன.
மேல்சபையான செனட் சபையை குடியரசு கட்சி தக்க வைத்துக்கொண்ட நிலையில், அக்கட்சிக்கு 51 உறுப்பினர்களும், ஜனநாயக கட்சிக்கு 44 உறுப்பினர்களும் கிடைத்தனர். இந்த நிலையில் அந்த நாட்டின் அரசு தலைமை வழக்கறிஞர் ஜெப் செசன்ஸ் தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் டிரம்புக்கு அனுப்பிவைத்தார்.
அதில், டிரம்ப் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தனது ராஜினாமாவை சமர்ப்பிப்பதாக அவர் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஜெப் செசன்ஸ் பதவி விலகலுக்கு நன்றி தெரிவித்து டிரம்ப் தனது டுவிட்டரில், ஜெப் செசன்சின் சேவைக்காக நன்றி தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டார். இது தொடர்பாக வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது அமைச்சரவையில், இடம் பெற்றுள்ளவர்கள் மீது மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும், இருப்பினும், மாறுபட்ட நபர்களை அமர்த்த வேண்டியிருப்பதால் ஒரு வாரகாலத்தில் அமைச்சரவை மாற்றப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.