மே 19ந் தேதி 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் உள்ளிட்ட தொகுதிகளுக்கு மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டபிடராம் தொகுதிகளுக்கும், சட்டமன்ற உறுப்பினர் மரணமடைந்ததால் சூலூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் வரும் 11ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், சூலூர் தொகுதிகளுக்கு மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஏப்ரல் 22ம் தேதி 4 தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கும் என்றும், வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 29ம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஏப்ரல் 30ம் தேதி 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் என்றும், மே 2ம் தேதி வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23ம் தேதியே, 4 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளும் வெளியாகும் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவா மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து, அவரது தொகுதியான பானாஜியிலும் மே19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version