ஜல்லிக்கட்டுக்கு தயாராகி வரும் காளைகள்

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு மதுரை மாவட்டம் மாடக்குளத்தில் ஜல்லிக்கட்டுக்காக காளைகள்  தயராகி வருகின்றன. களத்தில் எதிரிகளை களங்கங்கடிக்க தயாராகி வரும் காளைகள்

தைப்பொங்கல்  நெருங்கினாலே மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உற்சாகம் கரை புரளும். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்று பரிசுகளை அள்ளுவதற்காக காளைகளும் மாடு பிடி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக மதுரைக்கு அருகிலுள்ள மாடக்குளத்தில் ஒட்டுமொத்த கிராமமே ஜல்லிக்கட்டுக்காக தயாராகி வருகிறது. 50க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வரும் கிராமத்தினர் அதிகாலையில் எழுந்தது முதல் காளைகளை ஜல்லிக்கட்டுக்கு தயார் செய்கின்றனர்.

பயிற்சியின் போது காளைகளுக்கு சுடுதண்ணீர், கற்றாழை, உப்பு, மஞ்சள் பொடியை, கொத்தமல்லி உணவாக  கொடுப்பதோடு, நீச்சல்  பயிற்சியும் வழங்கப்படுகிறது வழங்கப்படுகிறது. தினமும் காளைகளுக்கு நடை பயிற்சி,  மண் குத்துதல் உள்ளிட்ட பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.ஜல்லிக்கட்டு துவங்குவதற்கு 30 நாட்களுக்கு முன்பு துவங்கி காளைகளுக்கு சத்தான உணவுகள்  வழங்கப்படுகின்றன.   ஜல்லிக்கட்டு போட்டிகளில் விளையாடும் காளைகள் சோர்வு அடையாமல் இருக்க இந்த  மாதிரி பயிற்சிகள் கைகொடுப்பதாக காளை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

மாடுபிடி வீரர்களாக வலம் வந்து பரிசுகளை தட்டிச் செல்வதிலும் காளைகளை வீரர்களுக்கு பிடி கொடுக்காதபடி வளர்ப்பதிலும் மாடக்குளம் கிராம மக்கள் திறன் வாய்ந்தவர்கள்.

நாட்டுக் காளைகளை தங்கள் குடும்ப உறுப்பினராக கருதி வளர்க்கும் மாடக்குளம் கிராமத்தினர் தாங்கள் பயிற்சியளிக்கும் காளைகள் நிச்சயம் பரிசுகளை வெல்லும் என நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.
 

Exit mobile version