திண்டுக்கல்லின் மேட்டுராஜக்காப்பட்டியில் 25 ஆண்டுகளாக வளர்க்கப்பட்டுவந்த கோயில் காளை மரணமடைந்த சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேட்டுராஜக்காப்பட்டியில் உள்ள காளியம்மன் கோயிலில் காளி என்ற ஜல்லிக்கட்டு காளை கடந்த 25 ஆண்டுகளாக வளர்த்து வரப்பட்டது. இந்த காளை திண்டுக்கல் மட்டுமின்றி திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை குவித்து வந்ததால், அப்பகுதியில் காளி மிகவும் பிரசித்தம்.
இந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டிகளிலும் காளி பல்வேறு பரிசுகளை குவித்தது. தங்கள் வீட்டு உறுப்பினரை போல அப்பகுதிகளை காளியை கொண்டாடி வந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக காளி உயிரிழந்துள்ளது. இதனால் அப்பகுதிவாசிகள் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து காளியின் இறுதி சடங்கு, காளியம்மன் கோயில் அருகே நடைபெற்றது. தாரை தப்பட்டை முழங்க காளியை அப்பகுதியினர் அடக்கம் செய்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.