நாமக்கல் மாவட்ட திமுக பிரமுகர், தன் மனைவியை ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக்க வேண்டும் என்பதற்காக, அதிமுக வார்டு உறுப்பினரின் கணவருக்கும், அவரது நண்பருக்கும், விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைமறைவாக உள்ள திமுக பிரமுகரை காவல்துறையினர் வலைவீசித் தேடிவருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி தாலுகா, கபிலர் மலையை அடுத்த சுப்பையாம் பாளையத்தைச் சேர்ந்தவர், திமுக பிரமுகரான ஆறுமுகம். இவருடைய மனைவி ராஜாமணி, நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இருக்கூர் ஊராட்சியில், திமுக சார்பில் போட்டியிட்டு வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.
இதே ஊராட்சியில் அதிமுக-வைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவரின் மனைவி சத்யாவும் வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பொறுப்பைக் கைப்பற்றுவதில், ராஜாமணிக்கும், சத்யாவுக்கும் இடையே மறைமுகப் போட்டி நிலவியது.
எப்படியாவது தனது மனைவி ராஜாமணியை, ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக்கிவிட வேண்டும் என ஆறுமுகம் திட்டமிட்டார். அதை நிறைவேற்ற, சத்யாவின் கணவர் செந்தில் குமாரை கொலை செய்வது என்ற கொடூர முடிவுக்கு வந்தார் திமுக பிரமுகர் ஆறுமுகம்.
அதற்காக காரியத்தில் இறங்கிய ஆறுமுகம், செந்தில்குமாரிடம் சாதுர்யமாகப் பேசி, மது அருந்த வருமாறு அழைத்தார். செந்தில் குமாரை மட்டும் தனியாக அழைத்தால், மற்றவர்களுக்குச் சந்தேகம் வரும் என்று நினைத்து, அவரது நண்பர் தியாகராஜனையும் அழைத்தார். பின் மூவரும், இருக்கூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகே மது அருந்தினர். அதில், செந்தில் குமார், தியாகராஜன் ஆகியோர் குடித்த மதுவில் மட்டும் விஷத்தைக் கலந்து வைத்திருந்தார் ஆறுமுகம். இதை அறியாமல் மதுவை குடித்த செந்தில் குமாருக்கும், தியாகராஜனுக்கும் சிறிது நேரத்தில் உடல் உபாதைகள் ஏற்பட்டன.
இதையடுத்து, அவர்கள் இருவரும் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் குடித்த மதுவில் விஷம் கலந்திருந்தது என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில், செந்தில் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடனடியாக, செந்தில் குமாரின் நண்பர் தியாகராஜன் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து பரமத்தி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தற்போது தலைமறைவாக உள் திமுக பிரமுகர் ஆறுமுகத்தைத் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.