கஜா புயலினால் பாதிக்கப்பட்ட அரியவகை ஆமை இனப்பெருக்கம்

கஜா புயலினால் ஆமைகள் இனப்பெருக்கம் வெகுவாக குறைந்துள்ளதையடுத்து ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் இன்று நாகை கடலில் விடப்பட்டன. இரு நூற்றாண்டுகளுக்கு மேல் உயிர்வாழும் அரியவகை ஆலிவ் ரெட்லி ஆமைகுஞ்சுகளின் இனப்பெருக்கம் கஜா புயலினால் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் அதன் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் விதமாக 470 ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகளை அதிகாரிகள் இன்று நாகை கடலில் விட்டனர்.

சாமந்தான்பேட்டை, நாகை ஆகிய பகுதிகளில் ஆலிவ் ரெட்லி அரியவகை ஆமைகளின் இனப்பெருக்கம் நவம்பர் மாதம் முதல்
மார்ச் மாதம் வரை நடைபெறும் என்று வனசரக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கோடியக்கரை முதல் கொள்ளிடம் வரை உள்ள பகுதிகளுக்கு வரும் ஆமை இனங்கள் முட்டைகள் இடுவது வழக்கம் என்றும் ஆனால் கஜா புயலின் காரணமாக 70 சதவீத ஆமைகள் முட்டைகள் இடவில்லை என்று வன உயிரின காப்பாளர் நாகாசதிஷ் கிடிஜாலா தெரிவித்தார்.

அதனை ஈடுகட்டும் விதமாக தற்போது 470 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டதாகவும் அவர் கூறினார். எனவே அரியவகை ஆலிவ் ரெட்லி ஆமைகளை காப்பதற்கு மீனவர்களும், கடலோர பகுதி மக்களும் பாலித்தீன், உள்ளிட்ட குப்பை கழிவுகளை கடலில் வீசாமல் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version