சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியில் உறை கிணறு கண்டறியப்பட்டுள்ளது. தமிழர்களின் தொன்மையான நகர நாகரீகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக சிவகங்கை மாவட்டம் கீழடி விளங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 13ம் தேதி தமிழக தொழில் துறை சார்பாக ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி ஆரம்பிக்கப்பட்டது. காலை முதல் மாலை வரை நடைபெறக்கூடிய அகழ்வாராய்ச்சி பணியில் தற்போது வரை சுமார் 24 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
15 நாட்களுக்கு முன்னதாக இருபுறங்களும் மதில்சுவர் போன்ற அமைப்பு காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடிநீர் பருகுவதற்கு பயன்படுத்தக்கூடிய குவளைகள் போன்ற அமைப்புடைய பொருட்கள் கண்டறியப்பட்டன. தற்போது 2 அடி முதல் 100 அடி வரை உள்ள உறை கிணறு கண்டறியப்பட்டுள்ளது. தமிழர்கள் இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பே நீர் மேலாண்மையில் மேலோங்கி வாழ்ந்தார்கள் என்பதற்கு இந்த உறை கிணறு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.
விரைவில் சுமார் ஒரு கோடி மதிப்பீட்டில் ஒரு ஏக்கர் பரப்பளவில், தமிழக அரசின் சார்பில் அருங்காட்சியகம் அமைய உள்ளது என்பது கூடுதல் சிறப்பாகும்.