2021ம் ஆண்டு சேவையை தொடங்குகிறது 'போயிங் 777-எக்ஸ்' விமானம்

உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானமான போயிங் 777-எக்ஸ் அடுத்த ஆண்டில் தனது சேவையைத் தொடங்க உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங் கமர்ஷியல் ஏர் பிளேன்ஸ் நிறுவனம்,  கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து 777 எக்ஸ் வகை பயணிகள் விமானங்களை வான்வழிப் போக்குவரத்தில் களமிறக்கி வருகின்றது. இந்த போயிங் 777 எக்ஸ் விமானங்கள் இரட்டை எஞ்சின் கொண்டவை, அதிக உட்காரும் இடங்களையும் உடையவை.
 
2013ஆம் ஆண்டில் போயிங் 777 எக்ஸ் வகையில் 384 பேர் அமரக் கூடிய, போயிங் 777-8 விமானம் உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இதுவே தொடர்ந்து உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானமாக இருந்து வந்த நிலையில், கடந்த 25ஆம் தேதியன்று போயிங் 777 எக்ஸ் வகையின் புதிய விமானம், அமெரிக்காவின் சியாட்டில் நகரில் தனது சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. 426 பேர் பயணம் செய்யக் கூடிய, இந்த விமானமே இதுவரை தயாரிக்கப்பட்ட பயணிகள் விமானங்களில் எல்லாம் மிகப் பெரியது ஆகும்.

இந்த விமானம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ‘போயிங் 777-9’ என்ற பெயரில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் முதல் பயணம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கானதாக இருக்கும்.
 
கடந்த ஆண்டு போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானதில் 346 பேர் பலியாகினர். எனவே போயிங் 737 மேக்ஸ் விமானங்களைப் பெரும்பாலான நாடுகள் பயன்பாட்டில் இருந்து நீக்கிவிட்டன.

இதனால் போயிங் கமர்ஷியல் ஏர் பிளேன்ஸ் நிறுவனத்தின் பெயர் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் புதிய போயிங் விமானத்தின் சோதனை ஓட்டமும் 2 முறைகள் தள்ளிப் போனது. தொடர் சிக்கல்களால் துயரத்தின் உச்சத்தில் இருந்த போயிங் நிறுவனத்திற்கு இந்தப் புதிய விமானத்தின் சோதனை ஓட்ட வெற்றி மிகப் பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது.
 

Exit mobile version