வாய்ப்புக்காக காத்திருப்பவர்கள் என்றுமே வெற்றியை தொட முடியாது, மாறாக வாய்ப்புகளை உருவாக்குபவர்களே சாதனையாளர்கள் என்பது புரூஸ்லியின் வாழ்க்கை தத்துவம். உலகளவில் இன்று சாதனை நாயகனாக பார்க்கப்படும் புரூஸ்லியின் பிறந்ததினம் இன்று. இதுகுறித்த செய்தித் தொகுப்பை தற்பொழுது காணலாம்.
உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்டவர் புரூஸ்லி. தற்போது வரை இவரது சாதனையை முறியடிக்க எந்த நடிகராலும் முடியவில்லை என்பதே இவரது சிறப்பு.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் ஹோய் சுவென் என்ற நடிகருக்கு 1940-ம் ஆண்டில் புரூஸ்லி பிறந்தார். லீ ஜூன்பென் என்பது இவரது இயற்பெயர். சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார் புரூஸ்லி.
தற்காப்புக் கலையையும், நடனத்தையும் ஒரே நேரத்தில் பயில முடியுமா? இதையும் புரூஸ்லி சாதித்துக் காட்டினார். 18 வயதில் பாக்சிங் சாம்பியன்ஷிப் வெற்றி. இதேபோல சாசா நடனத்திலும் அவர் சாம்பியன்.
உள்ளூரில் தெருச்சண்டைகளை கொண்டு வந்ததால், அவரை மீண்டும் சான்பிரான்சிஸ்கோ அனுப்பியது அவரது குடும்பம். அங்கு சென்று பகுதிநேர வேலையை செய்துகொண்டே தத்துவம் படித்தார்.
ஓரிரு நொடியிலேயே வெற்றி பெரும் புரூஸ்லியின் ‘ஜட் கியூன்டோ’ என்ற புதிய சண்டை முறைக்கு சீனாவில் பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆயினும் இந்தக் கலையை அமெரிக்கர்களுக்கு அவர் சொல்லிக் கொடுப்பதற்கு சீனர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு போட்டி சண்டையின் மூலம் இதிலிருந்தும் வெளியில் வந்தார் புரூஸ்லி.
1971ல் ‘தி பிக் பாஸ்’ படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த புரூஸ்லி, ரிடர்ன் ஆப் தி டிராகன், என்டர் தி டிராகன் மற்றும் பிஸ்ட் ஆப் பியூரி என நான்கே படங்களில் தான் நடித்தார். ஆனால், தற்போது வரை இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிர்களின் கனவு நாயகனாக நீடித்து வருகிறார்.
இவரது புகழை போலவே இவரது மரணமும் தற்பொழுது வரை பேசப்படும் விஷயமாகவே உள்ளது. புரூஸ்லியின் மரணம் விடுவிக்கப்படாத மர்ம முடிச்சாகவே இன்றும் தொடர்கிறது.