கிராமங்களுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதே மிகப்பெரிய சவால் என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் வரும் 17ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் 5வது முறையாக பிரதமர் மோடி, நேற்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த கலந்துரையாடலில், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோரும் கலந்து கொண்டனர். மாநிலங்களின் தற்போதைய நிலவரம், கட்டுப்பாடுகளுக்கான தளர்வு உள்ளிட்டவை குறித்து, பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். பின்னர் பேசிய பிரதமர், கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து இந்தியா தற்காத்துக் கொண்டுள்ளதை உலக நாடுகள் உணர்ந்துள்ளது என்றும், இதில் மாநிலங்கள் முக்கிய பங்காற்றியுள்ளதாகவும் தெரிவித்தார். அனைவரும், இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாகவும், ஆனால் சொந்த வீட்டுக்கு செல்ல வேண்டும் என எண்ணுவது மனித இயல்பு என்றும் பிரதமர் குறிப்பிட்டார். எனினும், கிராமங்களுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்த பிரதமர் மோடி, அது மிகப்பெரிய சவால் எனவும் கூறினார். தனி மனித இடைவெளி முறையாக கடைபிடிக்கப்படாத இடங்களில் நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

Exit mobile version