பொன்னியின் செல்வன் ஓவியங்களால் அழகாகும் பெரிய கோவில் சுவர்கள்

தஞ்சை பெரிய கோவிலை ஒட்டிய மதிற் சுவர்களில் பொன்னியின் செல்வன் ஒவியங்கள் மூலம் கல்லூரி மாணவர்கள் அழகு படுத்தியுள்ளனர்.

தஞ்சாவூர் பெரியகோயில் குடமுழுக்கு, நாளை நடைபெற உள்ளது. இதற்காக தஞ்சை மாநாகராட்சியே விழாக் கோலம் பூண்டுள்ளது இந்தநிலையில்   பெரியகோயிலுக்கு அருகே உள்ள சுவர்களில்  வண்ணமயமான ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. இவற்றை  கும்பகோணம் கவின் கல்லூரியில் உரிய அனுமதிபெற்று, மாணவர்களை வண்ண ஓவியங்களை வரைவதற்கு ஈடுபடுத்தியுள்ளனர். கடந்த சில தினங்களாக, இரவு பகல் பாராமல் அக்கல்லூரி மாணவர்கள் ஓவியங்களை வரைந்துள்ளனர். இவற்றை மக்கள் ரசித்து, அருகில் நின்று புகைப்படம்  எடுத்துக் கொண்டு செல்கின்றனர்.

சோழர்களின் கதையை மிக நெருக்கமாக மக்களை உணரச் செய்த புதினம், அமரர் கல்கி எழுதிய பொன்னியன் செல்வன்.  தொடராக வெளிவந்தபோது, வரலாற்றுச் சம்பவத்தை நேரில் பார்ப்பதுபோன்ற ஓவியங்களும் இடம் பெற்றிருந்தன. பொன்னியின் செல்வன்  வெளிவந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும், மக்கள் மனத்தில் நீங்காமல் இருக்கும் வரலாற்றுக் காவியமாக இன்றளவும் திகழ்ந்து வருகிறது. அந்த ஓவியங்கள், குடமுழுக்கை முன்னிட்டு சோழர்களின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளும் வகையில் வண்ணம் தீட்டப்பட்டுவருகின்றன. பெரியகோயிலுக்கு வரும் பக்தர்கள், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஓவியங்களைப் பார்த்து ரசித்த வண்ணம் செல்கின்றனர்.

Exit mobile version