4 நாட்களில் 2 அடி நீர்மட்டம் உயர்ந்த பவானிசாகர் அணை

பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் அணையின் நீர்மட்டம் 4 நாட்களில் 2 அடி உயர்ந்துள்ளது. 105 அடி உயரம், 32 புள்ளி 8 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை 3 மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இதனால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான வடகேரளா மற்றும் நீலகிரிப்பகுதிகளில் பரவலாக பெய்து வரும் மழையால், அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, கடந்த 4 நாட்களில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. நேற்று காலை அணைக்கு நீர்வரத்து ஆயிரத்து 872 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 2 ஆயிரத்து 703 கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 57 புள்ளி 45 அடியாகவும் நீர் இருப்பு 6 புள்ளி 4 டிஎம்சி யாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version