ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதை அடுத்து அணையின் மதகுகள் வழியாக 5 ஆயிரம் கனஅடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 15 ஆயிரத்து 133 கனாடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் மொத்த கொள்ளளவான 105 அடியில் தற்போது 102 அடியை எட்டியுள்ளது. இதனையடுத்து அணையிலிருந்து , 5 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், நீர் வரத்தை பொறுத்து, மேற்கொண்டு நீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.12 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து இரண்டு ஆண்டாக பவானிசாகர் அணை 102 அடி கொள்ளளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு முதல் மழை விட்டு விட்டு பெய்தது. நுங்கம்பாக்கம், தியாகராய நகர், வடபழனி, கிண்டி, வேளச்சேரி, பள்ளிக்கரனை, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மற்ற பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். அதேபோல், திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.