திருப்பத்தூர் மாவட்ட சிறந்த பள்ளிக்கான விருதை, இந்த ஆண்டு சிந்தகமானிபெண்டா அரசு நடுநிலைப் பள்ளி பெற்றுள்ளது. விருது பெற்ற பள்ளி ஆசிரியர்களை மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்துப் பாராட்டினார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த சிந்தகமானிபெண்டா என்ற மலைக் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அங்கு, வாணியம்பாடியைச் சேர்ந்த அருண்குமார் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் தனது சொந்தப் பணத்தில், திறன் பலகை உருவாக்கி மாணவர்களுக்கு பாடங்களைக் கற்பித்தார்.
இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து, ஆசிரியர் அருண்குமாருக்குப் பாராட்டுக்கள் குவிந்தன. இதையடுத்து, தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருது உள்பட பல விருதுகள் அருண்குமாருக்குக் கிடைத்தன. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தின் சிறந்த பள்ளிக்கான விருதை, இந்த ஆண்டு, சிந்தகமானிபெண்டா அரசு நடுநிலைப் பள்ளிக்கு தமிழக அரசு வழங்கியது.
இந்நிலையில், சிறந்த பள்ளிக்கான விருது பெற முக்கியக் காரணமாக இருந்த ஆசிரியர் அருண்குமார், தலைமை ஆசிரியர் கலையரசி, வட்டார கல்வி அலுவலர் லோகேஷா ஆகியோரை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் நேரில் அழைத்துப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார்.