கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறிய பன்றி இறைச்சி ஆலை!

அமெரிக்காவில் பன்றி இறைச்சி ஆலை ஒன்றில் பணியாற்றிய 600க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கொரோனா வைரசின் ஹாட்ஸ்பாட்டாக அந்த ஆலை மாறியுள்ளது. அமெரிக்காவின் சியோக்ஸ் நீர்வீழ்ச்சி அருகே ஸ்மித் பீல்டு என்ற பன்றி இறைச்சி ஆலை செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய பன்றி இறைச்சி ஆலைகளில், இந்த ஆலையும் ஒன்றாகும். இந்த இறைச்சி ஆலையில் பணியாற்றுபவர்களில் பெரும்பாலானோர் மியான்மர், எத்தியோப்பியா, நேபாளம், காங்கோ, எல் சால்வடோர் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள். அகதிகளும், கருப்பின மக்களும் கணிசமான அளவில் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், கொரோனா பாதிப்பு எதிரொலியாக அமெரிக்கா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அத்தியாவசிய உணவுப்பொருள் என்பதால் இந்த பன்றி இறைச்சி ஆலை இயங்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்த ஆலையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றும் நிலையில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆலை நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. முகக்கவசங்கள் வழங்க வேண்டும், தொழிலாளர்களின் உடல் வெப்பநிலையை கண்காணிக்க வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட எந்த விதிமுறைகளும் இந்த ஆலையில் கடைப்பிடிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், தொழிலாளர்கள் அனைவரும் அதிக நேரம் வேலை வாங்கப்படுவதாகவும், போதிய ஊதியம் வழங்கப்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில், ஆலை தொழிலாளர்கள் நெருங்கி நின்றவாறு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதிய உணவு இடைவேளையின்போது, 500க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி வந்துள்ளனர். கொரோனா பரவல் குறித்து அவர்கள் அறிந்திருந்தாலும், தங்களது வேலையை காப்பாற்றிக் கொள்ள தொடர்ந்து பணிக்கு சென்றுள்ளனர். இத்தகைய காரணங்களால், அந்த ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் ஒருவர் பின் ஒருவராக கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். பல தொழிலாளர்களுக்கு நோய் அறிகுறி தென்பட்டபோதிலும், ஆலை நிர்வாகம் அவர்களை தொடர்ந்து பணியாற்ற வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் தொழிலாளர்களை கவர 500 டாலர் சிறப்பு போனஸ் தொகையையும் ஆலை நிர்வாகம் அறிவித்தது.

இதனால், பல தொழிலாளர்கள் பணிக்கு செல்வதையும், பணி முடிந்து வீடு திரும்பியதும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதையும் வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த நிலையில்தான், அகஸ்டின் ரோட்ரிக்ஸ் மார்டினெஸ் என்ற 64 வயதான தொழிலாளி நோய் தொற்றால் உயிரிழந்தார். ஸ்மித் பீல்டு பன்றி இறைச்சி ஆலை கொரோனா வைரசுக்கு முதல் நபரை பலி கொடுத்தது. அத்துடன், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. கொரோனா நோய் பரவலை ஏற்படுத்தும் முக்கிய இடமாக அந்த ஆலை உருவெடுத்தது.

ஆலை நிர்வாகம் தொழிலாளர்களின் நலனை காட்டிலும், பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக குற்றச்சாட்டுகள் எழத்தொடங்கின. உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படி மார்ச் மாத தொடக்கத்திலேயே தாங்கள் வலியுறுத்தியதாகவும், தங்கள் கோரிக்கைக்கு ஆலை நிர்வாகம் செவிசாய்க்கவில்லை என தொழிலாளர் சங்கத்தினரும் குற்றம்சாட்டினர். பத்திரிகைகளும் இது தொடர்பாக செய்திகளை வெளியிட்டன. இதன் காரணமாக இறைச்சி ஆலை தற்போது மூடப்பட்டுள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பிற இறைச்சி கூடங்களையும் மூட ஆலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இருப்பினும், அந்த ஆலையில் பணியாற்றிய 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பத்தினருக்கும் நோய்த்தொற்று பரவி வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் மேலும் ஏற்படாமலிருக்க, அமெரிக்காவில் இயங்கி வரும் அனைத்து ஆலைகளிலும், முறையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

Exit mobile version