உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட மதம் சாராநூல் என்ற பெருமை திருக்குறளுக்கு மட்டுமே உண்டு. இதனை படைத்த வள்ளுவன் எப்படி இருந்திருப்பார் என்ற சிந்தனை அனைவர் மத்தியில் எழவே, 1959ம் ஆண்டு தனது ஒட்டுமொத்த சிந்தனையின் தூரிகையால் ஓவிய பெருந்தகை கே.ஆர் வேணுகோபால் ஷர்மா, திருவள்ளுவருக்கு முழுஉருவம் கொடுத்தார். மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓவியமாக அறிவித்து 60 ஆண்டுகளை நெருங்கியதையொட்டி, மணி விழாவாக அறிவித்திட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. உலக பொதுமறைகளில் ஒன்றான திருக்குறள் அன்றும், இன்றும், என்றும் பெருமையுடன் திகழ்ந்து வருகிறது. ஆயிரத்து 330 திருக்குறள்களை படைத்த வள்ளுவன் எப்படி இருந்திருப்பார் என்ற சிந்தனை, அந்தநாட்களில் பலருக்கும் எழுந்தது.
தங்களின் சிந்தனைக்கு எட்டிய வகையில் பலரும் வள்ளுவருக்கு உருவம் கொடுத்தனர்.ஒருவர் பட்டைப் போட்டு பார்த்தார், மற்றொருவர் மொட்டை போட்டு பார்த்தார். சிலர் சமயங்களுக்கும், மதங்களுக்கும் வள்ளுவரை சொந்தம் கொண்டாடினர். ஆனால், திருவள்ளுவர் தனது படைப்பில் எங்குமே இதனை கொண்டாடியதில்லை. உலகப் பொதுமறை தந்தவரின் உருவம் உலகளாவிய பொது உருவமாகத்தானே இருக்க முடியும் என்ற சமதர்ம நோக்கில் சிந்தித்த ஓவிய பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் ஷர்மா. ஒரு பொதுவான புறதோற்றத்தை வடிவமைக்க முடிவு செய்தார். 40 ஆண்டுகள் தொடர்ந்து வள்ளுவர் திருவுருவம் குறித்த சிந்தனை ஓட்டத்தில் அவர் இருந்தார்.
தனது வாழ்வை மைசூர் சமஸ்தானத்து கலைஞராக துவக்கிய அவர், நேரம் கிடைத்த போதெல்லாம் வள்ளுவரை வரைந்து பார்த்தார். இந்திய சிந்தனையும், ஐரோப்பிய உபகரணங்களையும் கைகோத்துக்கொண்டு விலை உயர்ந்த தூரிக்கைகள், வர்ணங்கள் ஓவியக்கலைக்கு உதவும் நுண்ணிய உபகரணங்களைப் பயன்படுத்தி வள்ளுவருக்கு முழுஉருவம் கொடுத்தார். அண்ணா, காமராஜ், ஜீவானந்தம், கக்கன் என பலரும்வேணுகோபால் ஷர்மா இல்லத்திற்கு சென்றுதிருவள்ளுவரை உருவத்தை கண்டு மெய்சிலிர்த்தனர்.
மத்திய, மாநில அரசால் திருவள்ளுவர் திருவுருவம் அங்கீகரிக்கப்பட்ட ஓவியமாக அறிவிக்கப்பட்டது. 1959 இல் வெளியிடப்பட்ட வள்ளுவர் உருவப்படமானது,1964 ல் தமிழக சட்டசபையில் அன்றைய துணை ஜனாதிபதி ஜாகிர் உசேன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 1967ல் ஆட்சிப் பொறுப்பேற்ற மறைந்த முதலமைச்சர் அண்ணாதுரை திருவள்ளுவரின் உருவப்படத்தை அனைத்து அரசு அலுவலகங்களிலும் இடம்பெறச் செய்ய அரசாணை பிறப்பித்தார். 40 ஆண்டு காலமாக தனது சிந்தனையால் ஷர்மா வரைந்த வள்ளுவர் ஓவியம் 60 ஆண்டுகளை நெருங்கியுள்ள நிலையில்,மணி விழாவாக அறிவிக்க வேண்டும் என அவரது மகன் ஸ்ரீராம் ஷர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.