இளஞ்சிவப்பு பட்டாடை அணிந்து காட்சியளிக்கும் அத்திவரதர்

காஞ்சிபுரத்தில் இளஞ்சிவப்பு வண்ணப் பட்டாடை அணிந்து ராஜமகுடம் சூடி காட்சியளிக்கும் அத்திவரதரைப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் விழா ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கியது. முதலில் சயனக் கோலத்தில் காட்சியளித்த அத்திவரதரை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஆகஸ்டு ஒன்றாம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சியளித்துவரும் அத்திவரதரை, நாள்தோறும் லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று ஒரேநாளில் மட்டும் 3 லட்சத்து 75 ஆயிரம் பக்தர்கள் அத்திவரதரைத் தரிசனம் செய்தனர். கடந்த 44 நாட்களில் மொத்தம் 92 லட்சத்து 75 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

45வது நாளான இன்று, இளஞ்சிவப்புப் பட்டாடை அணிந்து, ராஜமகுடம் சூடி அத்திவரதர் காட்சியளிக்கிறார். அத்திவரதர் தரிசனம் நிறைவடைய இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் கூட்டம் அலைமோதுகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Exit mobile version