சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்
17வது மக்களவை தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டன. எனினும் இந்தக் கூட்டணி தேர்தலில் படுதோல்வியடைந்தது. இந்நிலையில், லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்த மாயாவதி, மக்களவை தேர்தல் தோல்விக்கு சமாஜ்வாதி கட்சியே காரணம் என்று குற்றம் சாட்டினார். சமாஜ்வாதி கட்சியின் வாக்கு வங்கியாக உள்ள ஒரு பிரிவு மக்கள் தங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை என்றும், அதனால் தங்கள் கட்சியின் முக்கிய வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளதாகவும் மாயாவதி குற்றம்சாட்டினார். எனவே, இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட போவதாகவும் அவர் கூறினார்.