மக்களவைத் தேர்தலையொட்டிய அதிமுகவின் அறிக்கையில், காவிரி-கோதாவரி இணைப்பு, புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து, கேபிள் டி.வி கட்டணக் குறைப்பு உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. சாலைப் போக்குவரத்து சுங்கவரியை ரத்து செய்ய வேண்டுமென மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும் என்றும், காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற அதிமுக பாடுபடும் என்றும் உறுதி அளித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தும் நடவடிக்கைக்கு எதிரான கேரள அரசின் நடவடிக்கைக்கு எதிராக, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம் என்றும், தமிழகத்தில் மத்திய அரசின் மின் திட்டங்கள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் தமிழகத்தின் பயன்பாட்டுக்கே வழங்கப்பட மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என்றும் அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் அதிகம் வாழும் அயல்நாடுகளுக்கான இந்தியத் தூதுவர்களாக தமிழர்களையே நியமிக்க மத்திய அரசிடம் வலியுறுத்த உள்ளதாகவும், பொது சிவில் சட்டம் எந்த வடிவத்திலும் நிறைவேற்றப்படக் கூடாது என மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்குக் கொடுக்கும் அரசியலமைப்பின் 356ஆவது பிரிவு முழுமையாக நீக்கப்பட வலியுறுத்தப்படும் என்றும், புதுச்சேரி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் புதுச்சேரிக்கு முழுமாநிலம் என்ற சுயாட்சித் தகுதியை வழங்க மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் கேபிள் மற்றும் டி.டி.ஹெச். கட்டணங்களைக் குறைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றும் அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.