மக்களவைத் தேர்தலை ஒட்டிய அதிமுகவின் தேர்தல் அறிக்கையில், மீனவர்கள், கைத்தறி தொழிலாளர்கள், மாணவர்களின் பிரச்சனைகளை களையும் வகையில் பல்வேறு திட்டங்கள் பற்றிய அறிவிப்பும் வெளியாகியுள்ளது. உள்நாட்டு மீனவர்களின் சமூக மற்றும் பொருளாதார நலன்களை மேம்படுத்த ‘தேசிய மீனவர் நல ஆணையம்’ உடனடியாக அமைக்கப்பட மத்திய அரசுக்கு வலியுறுத்துவோம் என்றும், மீனவர்கள் பலன்பெற ‘பிரத்யேக மீன் ஏற்றுமதி மற்றும் மீன் பதப்படுத்தும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள்’ ஏற்படுத்தப்பட மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றும் அதிமுக தெரிவித்துள்ளது.
இயற்கை இடர்பாடுகளால் வாழ்வாதாரத்தை இழக்கும் மீனவர்களுக்காக ‘முழு அளவில் காப்பீடு செய்து கொடுக்கும்’ திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசைக் கேட்க உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மீன்பிடித் தடைக்காலங்களில் அனைத்து மீனவர்களுக்கும் மாதம் தலா 7,000 வாழ்வாதார ஈட்டுத் தொகை வழங்க மத்திய அரசை வலியுறுத்தவும், நலிந்துவரும் கைத்தறித் தொழில்களைக் காக்க அவற்றுக்கு சரக்குகள் மற்றும் சேவைகள் வரியில் இருந்து முழுமையான விலக்கு அளிக்க வலியுறுத்தப்படும் என்று அதிமுக உறுதி அளித்துள்ளது.
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்த மத்திய அரசுக்கு வலியுத்தவும், வேலையில்லாமல் மாணவர்கள் தவிக்கும் நிலையில், அவர்களின் கல்விக் கடன்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்பட மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றும் அதிமுக தெரிவித்துள்ளது.
பள்ளிப்படிப்பை நிறைவு செய்த இளைஞர்கள் அனைவருக்கும், தகுதியுடைய வேலைவாய்ப்பு கிடைக்கும்வரை மாதம் 2000 ரூபாய் வரை உதவித் தொகை வழங்க மத்திய அரசை வலியுறுத்த உள்ளதாகவும், ஈழத் தமிழர்களுக்கு உரிய நீதி கிடைக்கவும், அவர்களின் உரிமைகள் நிலை நாட்டப்படவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 தமிழர்களை உடனடியாக விடுவிக்கும் உரிய ஆணைகள் பிறப்பிக்க மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியுறுத்துவோம் என்று உறுதி அளித்துள்ள அதிமுக, கச்சத்தீவை மீட்கவும், அப்பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டவும் பாடுபடும் என்று உறுதி அளித்துள்ளது.
இந்தியாவின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக அன்னைத் தமிழ் அங்கீகரிக்கப்பட, அதிமுக மத்திய அரசை வலியுறுத்தும் என்றும், தமிழக நீதிமன்றங்களில், தமிழை நீதிமன்ற அலுவல் மொழியாக மத்திய அரசு அறிவிக்க வலியுறுத்தப்படும் என்றும் கூறியுள்ளது.
மத்திய அரசின் திட்டங்களுக்கான பெயர்கள் மொழிபெயர்க்கப்படுவதற்கு பதிலாக, அவை தமிழில் பெயர் சூட்டப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வலியுறுத்தவும், மத்திய அரசு அதன் வரிவருவாயில் 60% தொகையை மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தவும் அதிமுக உறுதி அளித்துள்ளது.