மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளையொட்டி, தேனியில் அதிமுக பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் 1 லட்சத்து 71 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தேனி லட்சுமிபுரம் மாவட்ட நீதிமன்றம் அருகில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாள் விழாவையொட்டி பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 10 ஒன்றியங்களில் இருந்து 1 லட்சத்து 71 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்களுக்கு தையல் மிஷின், மிதிவண்டி, இஸ்திரி பெட்டி, மொபைல் போன், மின்விசிறி, உட்பட வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டது. துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
தேனியில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், அதிமுக தவிர எந்த இயக்கத்திலும் தொண்டர் ஒருவர் முதலமைச்சராகி விட முடியாது எனத் தெரிவித்தார். அதிமுக என்றுமே சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாகத்தான் இருக்கும் என்றும், அது அதிமுகவின் உயிர்பிடிப்பான கொள்கை என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டார்.