விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் ராஜவர்மனிடம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சிவஞானம் வெற்றிச் சான்றிதழை வழங்கினார். பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உடன் இருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுகவுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இதேபோல் தர்மபுரி மாவட்டம் அரூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் சம்பத்குமார் வெற்றி பெற்றார். அதிமுக வெற்றி பெற்றதையடுத்து இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் தொண்டர்கள் உற்சாக கொண்டாடினர். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வேட்பாளர் சம்பத்குமார் தேர்தல் அலுவலரிடம் பெற்றுக்கொண்டார்.
கோவை சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கந்தசாமி வெற்றி பெற்றதையடுத்து அதிமுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். சூலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் கந்தசாமி, திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை தோற்கடித்தார். அதிமுகவின் வெற்றியை தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் நாகராஜன் வெற்றி பெற்றார். அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பாஸ்கரன் ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்திற்கு நேரில் சென்று வேட்பாளருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து வேட்பாளரிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் வழங்கினார்.