சிறுபான்மை சமூக மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக, அதிமுக எப்போதும் செயல்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர்., கழக நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் கட்டிக் காத்த கழகம், சிறுபான்மை மக்களின் நலன் காக்கும் சமத்துவ, சகோதரத்துவ கொள்கைகளை நிலைநாட்ட எப்பொழுதும் உறுதியாய் பாடுபடும் என்று தெரிவித்துள்ளனர்.சமூக விரோத சக்திகளும், பதவிக்கு வருவதற்காக பாதகச் செயல்களை மனசாட்சியின்றி துணிந்து செய்யும் சில எதிர்க்கட்சிகளும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பதை, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் அதிமுக அரசுக்கு மக்களின் பேராதரவு பெருகி வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல், இஸ்லாமிய மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த திமுக முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளனர்.எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து அதிமுக அரசு, இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாவலனாகவும், அவர்களின் நலன் காக்கும் நண்பனாகவும் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் புனித பயணத்திற்கான மானியத் தொகையை மத்திய அரசு நிறுத்தினாலும், அதிமுக அரசு ஆண்டுதோறும் 6 கோடி ரூபாயை வழங்கி வருவதாகவும், தமிழ் நாட்டில் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களுக்கு நோன்புக் கஞ்சி தயாரிக்க 5 ஆயிரத்து 145 மெட்ரிக் டன் அரிசியை, ரம்ஜான் மாதத்தில் வழங்கி வருவதையும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் வக்ஃபு நிறுவனங்களில் பழுதுபார்த்தல் மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு ரூபாய் 5 கோடி ரூபாய் தொகுப்பு நிதி வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.குறைந்த வட்டியில் கல்விக் கடன், தனிநபர் மற்றும் சிறுகடன்கள், அதிமுக அரசால் வழங்கப்பட்டு வருவதாகவும், ஓய்வுபெற்ற உலமாக்களுக்கான ஓய்வூதியம் ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து, 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஹஜ் பயணிகள் வசதிக்காக, 15 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் ஹஜ் இல்லம் மற்றும் வக்ஃபு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க 25 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்பட உள்ளதையும் தெரிவித்துள்ளனர்.சிறுபான்மை மக்களுக்கு உதவிட இன்னும் பல திட்டங்களை செயல்படுத்த அதிமுக அரசு துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமிய சமூகத்திற்கும் அதிமுகவிற்கும் இடையேயான நெருக்கமான உறவையும், புரிதலையும் பிரிக்க முயற்சிக்கும் சக்திகளை முறியடித்து, எல்லோரும் ஓரினமாக முன்னேற்றம் கண்டிட, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளனர்.