அச்சத்தை ஏற்படுத்தும் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளும், செலவினங்களும், விசித்திர போக்கும்!

கொரோனா பாதிப்பை சமாளிக்க பொதுமக்களிடம் நிதி கோரியுள்ள தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுக்கான அறைகளை பிரமாண்டமாக புதுப்பிக்க பல கோடி ரூபாயை செலவிடுகிறது.

தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளும், செலவினங்களும், விசித்திர போக்கும் அச்சத்தையே ஏற்படுத்துகிறது

 

 

தமிழகத்தில் கொரோனா தொற்று சிகிச்சைக்காக மாநில அரசுக்கு நிதியுதவி அளித்து உதவுமாறு அரசு வேண்டுகோள் விடுத்தது.

பொதுமக்களும் தங்களால் முயன்ற நிதியுதவிகளை இந்த இக்கட்டான சூழ்நிலையில் வழங்கி வருகின்றனர்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காகவும் பல்லாயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில், புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்காக தலைமை செயலகத்தில் உள்ள அறைகளை புதுப்பிக்கும் பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகிறது.

முன்னாள் அமைச்சர்களின் அறைகளில் இருந்த பொருட்கள் ஒன்றையும் விட்டுவைக்காமல் மொத்தமாக மாற்றும் பணி துரிதமாக நடைபெறுகிறது.

இதனால் ஏற்கனவே அமைச்சர்களின் அறைகளில் இருந்த மேஜை, நாற்காலிகள், கணினிகள், பிரிண்டர்கள் உட்பட அனைத்து வகையான பொருட்களும், நல்ல நிலையில் இருந்தாலும், புதிய அமைச்சர்களின் உத்தரவுப்படி வெளியே எடுத்து போடப்பட்டுள்ளது.

நல்ல நிலையில் உள்ள பொருட்கள் மாற்றப்படும் நிலையில், அதனை மாற்று வகையில் கூட பயன்படுத்த நினைக்காத அதிகாரிகள் அவற்றை தலைமை செயலக வளாகத்தில் வெட்டவெளியில் போட்டு வைத்துள்ளனர்.

மழையிலும் வெளியிலும் சிக்கி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வீணாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அறையை புதுப்பிப்பதற்காக குறைந்தது ஐந்து லட்சம் ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் வரை செலவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

ஸ்விட்ச் போர்ட் முதற்கொண்டு, அறைகளில் உள்ள சுவற்றின் சுண்ணாம்புக்கும், பளபளக்கும் தரை அமைக்கவும் செலவுகள் கோடிகளை கடந்தாலும் தாராளமயம் காட்டப்படுகிறது.

பொதுமக்களிடம் நிதியுதவி கேட்கும் நிலைமையில், தேவையற்ற ஆடம்பரங்களுக்காக அரசு செலவிடுவது வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சிறுவர், சிறுமிகள் தங்கள் உண்டியல் சேமிப்புகளை வழங்கி வரும் காலக்கட்டத்தில், தமிழக அரசு இதுபோன்ற ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது குறித்து துளியும் யோசிக்கவில்லை என்பது புலப்படுகிறது.

இக்கட்டான சூழ்நிலையிலே இவ்வாறு என்றால், நாட்கள் செல்ல செல்ல காட்சிகள் எவ்வாறெல்லாம் மாறுமோ என்ற அச்சத்தையே ஏற்படுத்துகிறது…

நியூஸ் ஜெ செய்திகளுக்காக செய்தியாளர் அஜ்மலுடன், பிரவீன்குமார்..

Exit mobile version