மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அடுத்த தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில், தமிழ் ஆர்வலர் ஒருவர் ஓலைச் சுவடிகளில் எழுதியுள்ளார்.
2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான உலகப் பொதுமறையாம் திருக்குறள் நமக்கு கிடைத்தது ஓலைச் சுவடிகள் மூலம் தான். ஆனால் இளைய தலைமுறைக்கு இந்த ஓலைச்சுவடிகளுடன் எந்த பரிச்சயமும் இல்லை.
இந்த நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நல்லிக்கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி என்ற தமிழ் ஆர்வலர், 1330 குறள் மற்றும் அதன் விளக்கங்களை ஓலைச்சுவடிகளில் எழுதியுள்ளார். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் அழியாமல் இருக்க, அதற்கேற்ற வகையில் ஓலைச் சுவடிகளை உருவாக்கியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளையும் அவர் ஓலைச்சுவடிகளில் எழுதியுள்ளார். இதுமட்டுமின்றி கம்பராமாயணம் உள்ளிட்ட பல்வேறு இலக்கிய படைப்புகளை சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஓலைச்சுவடிகளில் எழுதி வருகிறார்.
இந்த ஓலைச்சுவடிகளை வாங்க வெளி மாநிலத்தைச் சேர்ந்த பலரும் ஆர்வம் காட்டி, வந்த நிலையிலும், தனது படைப்புகள் தமிழக மக்களுக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கில், தமிழக அரசு தனது படைப்புகளை வாங்கி, அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.தான் தயாரித்த ஓலைச்சுவடிகளை பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்வையிடும் வகையில் கண்காட்சிகளிலும் வைத்து வருகிறார் தெய்வசிகாமணி.