அரசுப் பேருந்துகள் பராமரிப்பு இல்லாமல் இயக்கப்பட்டதால், ஓடத் தொடங்கிய முதல் நாளிலேயே விபத்து

புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், அரசு பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டன.

புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில், பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மெட்ரோ ரயில் சேவைக்கும் தளர்வில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சென்னையில் மாநகரப் பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் இயக்கப்பட்டு வரும் நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகளும் இயக்கப்பட்டன.

ஆனால், மற்ற மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படும் என்று நம்பி வந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

செங்கல்பட்டில் இருந்து இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகளில், பாதுகாப்பான இடைவெளியின்றி 100 சதவீத பயணிகள் பயணம் செய்தனர்.

குறிப்பாக காஞ்சிபுரம், மதுராந்தகம் வழித்தடங்களில், அரசுப் பேருந்துகளில் அளவுக்கு அதிகமாக பயணிகள் பயணித்தனர்.

போக்குவரத்து அதிகாரிகளும் அரசின் நோய் தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க தவறியதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.

போக்குவரத்து அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி, 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

 

அரசுப் பேருந்துகள் பராமரிப்பு இல்லாமல் இயக்கப்பட்டதால், ஓடத் தொடங்கிய முதல் நாளிலேயே விபத்து ஏற்பட்டது.

திருநின்றவூரில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு பூந்தமல்லி நோக்கி சென்ற அரசுப் பேருந்து, பூந்தமல்லி நீதிமன்றம் எதிரே வந்த போது, டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.

இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, முன்னால் சென்ற வேன் மற்றும் கார் மீது மோதி, சாலையின் தடுப்பு சுவரில் மோதி நின்றது. இதில் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் மற்றும் பயணிகள் 4 பேர் காயம் அடைந்ததுள்ளனர்.

 

 

Exit mobile version