ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கும் கொள்முதல் விலையைப் பசும்பாலுக்கு லிட்டருக்கு 4ரூபாயும், எருமைப்பாலுக்கு லிட்டருக்கு 6 ரூபாயும் உயர்த்தியுள்ளது.
இது குறித்துத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கால்நடைத் தீவனம் உள்ளிட்ட இடுபொருட்கள் விலை உயர்வால் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் எனப் பால் உற்பத்தியாளர்கள் அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கை வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளது. இதனால் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள 4 லட்சத்து 60ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் பசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 28 ரூபாயில் இருந்து 32ரூபாயாகவும், எருமைப்பால் விலையை லிட்டருக்கு 35ரூபாயில் இருந்து 41 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல் அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு ஆறு ரூபாய் உயர்த்தப்படும். பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்வு வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.